செவ்வாய், 16 டிசம்பர், 2008

தேடல்

(வாழ்கை துணையை தீவிரமாய் தேடுபவர்களுக்கு...)

உன் உயிரின் தேடலில் நீ
செவிடனாகிவிட்டாய் குருடனாகிவிட்டாய் !
நிலவின் ஆதிக்கத்தில் உன்னை
தழுவும் தென்றலுக்கு
இசையமைப்பவள் அவளென்று அறியாயோ !
ஞயாயிறின் ஆதிக்கத்தில்
உன் காட்சிப்பொருளின் அழகென
நிறைந்திருப்பவள் அவளென்று அறியாயோ !
பதியார் இங்கிருக்க
உமையவள் எங்கிருக்க கூடும் !?!

வெள்ளி, 21 நவம்பர், 2008

STC12-A

கண்களின் நேர் பார்வையில்
வானம் பூமியின் சமரசம் !
அங்கு மிதக்க பிறக்கும் மேகங்கள்
கை கோர்த்து நடை பழகும் !
காற்றென்னும் உளி அவைகளை
விரும்பியபோதெல்லாம் வடிவமைக்கும் !
அதில் உதிரும் மழைத்துளிகள் போட்டிக்கொண்டு
எம்மைத்தொட ஓடி வரும் !

பொன்னிற மாலை பொழுது
சமரசத்தில் இணையும் சூரியன் !
சேகரித்த அன்றைய தகவல்களை
ஆங்காங்கு பகிரும் பறவை கூட்டம் !
அலுவல்களை முடித்துக் கொண்டு
தலைவனை தொடர்ந்து கூடு திரும்பும் !
அனுபவங்களை தாலாட்டென இசைத்து
தன் குழந்தைகளை உறங்கச்செயும் !

சூரியன் முடித்த பணியை
மின்விளக்கு தொடர துவங்கும் !
விளக்குகள் ஏந்திய வாகனங்கள்
நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் !
வாகன வெள்ளம் கடந்தால், வரவேற்க
தெருவோரம் நின்று தெருவிளக்கும் கண்ணடிக்கும் !
இவ்விளக்குகள் செயல்புரிய மறுத்துவிட்டால்
வெளிச்சத்திற்கு வெண்ணிலா தலைமை தாங்கும் !

நகரின் எத்திசையில் மழை !
எத்திசையில் வெயில் !
நகரின் எப்பகுதியில் பசுமை !
எப்பகுதியில் வெறுமை !
இவைகளையெல்லாம் கண்டு ரசிக்க செய்தது
பன்னிரெண்டாம் தளம் !
ரசிப்பதற்கு ஏற்ப அலுவலிடம் கொடுத்தது
எமக்கு அளித்த வரம்!!!

வெள்ளி, 24 அக்டோபர், 2008

நிலா உலா

அழகா இருக்கியே நிலா !
வானத்துல வர்றே உலா !
மின்னிட்டு இருக்கேன் உனக்கு பக்கத்துலதான் நட்சத்திரமா !
எந்த மேகத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கேன்னு கண்டுபுடி தைரியமா !

திங்கள், 6 அக்டோபர், 2008

இனிய இரவு


இதோ நிலவு வெள்ளொளி வீசி
இரவை குளிரச் செய்து கொண்டிருக்கிறது !
இருதயம் தாண்டி ஆன்மாவில்
அமைதி நிலவ ஆரம்பித்து விட்டது !
இந்நாள் நன்னாளாய் அமைந்ததற்கு
இறைவனுக்கு நன்றி செலுத்தி
கண்களை மூடி
ஆழ்ந்த உறக்கம் கொள்க !
இனிய இரவு !!!

அலைகள்

அலைகள் !
ஒன்றன் பின் ஒன்றாய்,
சிறுதும் பெரிதுமாய்,
உறவென்று சொல்லிக்கொண்டு
உரையாடிவிட்டு போகும் !
உரையாடும் பொழுது களிப்பதும்
விலகும்பொழுது தவிப்பதும் இயல்பே!

நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!

திங்கள், 8 செப்டம்பர், 2008

தூது

ஆதவனின் தூது வெந்கதிறாய் பனித்துளிக்கு !
ஆழ்கடலின் தூது பனிமலையாய் காற்றுக்கு !

விடியலின் தூது செந்நிறமாய் இரவுக்கு !
விரிந்த வானின் தூது மழைத்துளியாய் விளைநிலத்துக்கு !

பழந்தமிழின் தூது இலக்கியமாய் உயர்புலவர்க்கு !
பால்நிலவின் தூது வெள்ளொளியாய் இருளுக்கு !

இயற்கையின் தூது இயற்கையாய் இயற்கைக்கு !
இங்கு எவரின் தூது எதுவாய் எவருக்கு!?!

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

அமைதி


அகன்ற விழிகளில் கூரையாய் என் வானம் !
இரு விழிகளும் அறியாது
இரு இமைகள் இனைந்த நேரம் !

அன்றே மலர்ந்த மழலையாய் நான் !
தவழ்ந்தேன் என் அன்னை மடியில்
செவித்து நெகிழ்ந்தேன் அவள் தமிழ் பாட்டில்!

கடந்த காலம் கடந்தனவாய் !
வரும் காலம் வருவனவாய் !
தந்தேன் என் நிகழ்காலம் அவள் கையில்
பெற்றேன் அமைதியை என் நெஞ்சில் !

வியாழன், 4 செப்டம்பர், 2008

நிலா

அள்ளமுடியா முத்து !
தேவலோகத்தின் சொத்து !

எட்டா கனி !
தூவினாய் பனி !

ஆதிசேஷனின் வெண்மரகதம் !
வெப்பத்திற்கு சுதந்திரம் !

வான்மகளின் நெற்றிப்பொட்டு !
சிந்தா இனிய தேன் கூடு !

மின்மினிகளின் மின்சாரம் !
சிதறா பாதரசம் !

மேகங்களை சலவை செய்யும் படிகாரம் !
மொட்டுக்களின் இரவு நேர கடிகாரம் !

நீ இன்றி உருவாக்கினாய் அமாவாசை !
வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இசை !!!

அறிமுகம்

தமிழ் பழமை வாய்ந்த செம்மொழி !
அதில் என் மதி அறிந்த, அழகிய நான்கு சொற்கள்
எடுத்து கோர்த்து பொருள்பட எழுதினேன்
கவி என்று பெயரிட்டது நட்புலகம் !
கவி உருவாகும் விதிமுறைகளுக்கு உட்படவில்லையேல்
சாடபடுபவள் நானில்லை!
எழுத்துக்களை சேமித்து வைக்க இவ்விடம் அறிமுகமாகியதால்
அறிமுகமாகிறேன் கவியுலகிற்கு!

வணக்கம்!