வெள்ளி, 21 நவம்பர், 2008

STC12-A

கண்களின் நேர் பார்வையில்
வானம் பூமியின் சமரசம் !
அங்கு மிதக்க பிறக்கும் மேகங்கள்
கை கோர்த்து நடை பழகும் !
காற்றென்னும் உளி அவைகளை
விரும்பியபோதெல்லாம் வடிவமைக்கும் !
அதில் உதிரும் மழைத்துளிகள் போட்டிக்கொண்டு
எம்மைத்தொட ஓடி வரும் !

பொன்னிற மாலை பொழுது
சமரசத்தில் இணையும் சூரியன் !
சேகரித்த அன்றைய தகவல்களை
ஆங்காங்கு பகிரும் பறவை கூட்டம் !
அலுவல்களை முடித்துக் கொண்டு
தலைவனை தொடர்ந்து கூடு திரும்பும் !
அனுபவங்களை தாலாட்டென இசைத்து
தன் குழந்தைகளை உறங்கச்செயும் !

சூரியன் முடித்த பணியை
மின்விளக்கு தொடர துவங்கும் !
விளக்குகள் ஏந்திய வாகனங்கள்
நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் !
வாகன வெள்ளம் கடந்தால், வரவேற்க
தெருவோரம் நின்று தெருவிளக்கும் கண்ணடிக்கும் !
இவ்விளக்குகள் செயல்புரிய மறுத்துவிட்டால்
வெளிச்சத்திற்கு வெண்ணிலா தலைமை தாங்கும் !

நகரின் எத்திசையில் மழை !
எத்திசையில் வெயில் !
நகரின் எப்பகுதியில் பசுமை !
எப்பகுதியில் வெறுமை !
இவைகளையெல்லாம் கண்டு ரசிக்க செய்தது
பன்னிரெண்டாம் தளம் !
ரசிப்பதற்கு ஏற்ப அலுவலிடம் கொடுத்தது
எமக்கு அளித்த வரம்!!!