சனி, 8 ஆகஸ்ட், 2009

தந்தையாக்கிய மகன்

பிடிகொண்டு கற்க மறுத்தாய்
- மகனாய் இருந்து விட்டாய் !
பிடிதளர் நாடாமல் அந்நல்வழி பற்ற தீட்டிக்கொள்
- பெற்றவன் ஆகி விட்டாய் !

இன்றும் நாளையும்

இன்பங்கள், இறைவன் பாதம் பணியட்டும் !
துன்பங்கள், நிலையா தென்றலுடன் இணையட்டும் !
மனம், உனது 'இன்றை' உயிர் நண்பன் காதில் ஓதட்டும் !
கடனற்ற உனது 'நாளை' புதியதாய் துவங்கட்டும் !!!

வியாழன், 2 ஏப்ரல், 2009

நண்பா

(நட்புலகிற்கு பதில் சொல்வாயா..)

வெண்மலர் காதல் நெஞ்சில் கொண்டாய்
உன் பாதி நீ சேரா சூல்வலி கொண்டாய்
வலி நீங்குவதாய் உயிர் நீங்கினாயே
இக்கணம் சொல் வலியை நீங்கினாயா?

என்றும் மற்றோர் நலன் நினைவிற் கொண்டாய்
உனக்கென நினைவிற் கொள்ள மறந்து விட்டாய்
இவ்வலி உடலையன்று உயிரை சார்ந்ததென்று !
உடலை பிரிந்தாலும் உயிர் வாழுமென்று !

திங்கள், 23 மார்ச், 2009

வேலையுதிர்காலம்


முழு நிலவும் காணாமற் கரைந்து போக
பதினைந்து நாள் அவகாசம் தேவை
இவன் கொடுக்கப்படவில்லை!

பூஞ்சோலை பாலைவனமாக உருமாற
பல நூறு ஆண்டுகள் அவகாசம் தேவை
இவன் அளிக்கப்படவில்லை!

கிளைகள் தன் சொந்தங்களை இழக்க
ஒரு இலையுதிர் காலம் அவகாசம் தேவை
இவன் வழங்கப்படவில்லை!

மிதந்து வரும் சுனாமி நிலத்தினை தொட்டழிக்க
சில மணி நேரங்கள் அவகாசம் தேவை
இவன் அறிவிக்கப்படவில்லை!

பிறந்த மேனி சாம்பலாய் காற்றில் மறைய
ஒரு ஆயுள் காலம் அவகாசம் தேவை
இவன் பெறப்படவில்லை!

இவன்--
நேற்றைய எதிர்காலம் இன்றைய கேள்விக்குறியாய்
கலங்கி நிற்கும் கணிப்பொறி வள்ளுவன்!!